Tuesday, 8 October 2013

வடவாம்பலம் கிராமம்-ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி

மயங்கி விழுந்த சாஸ்திரி — ரா. வேங்கடசாமி

விழுப்புரம் அருகில் உள்ளது வடவாம்பலம் கிராமம். 1926-ம ஆண்டு மகா பெரியவர் அந்த வழியாக போகும்போது மனதில் ஏற்பட்ட திடீர் சலனத்தின் காரணமாக அந்த கிராமத்துக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்தார்."இங்கே ஒரு சந்நியாசி இருந்தாரே, ஞாபகம் இருக்கிறதா? என்று எதிர்பட்ட கிராமத்து முதியோர்களிடம் கேட்டார், யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்த கும்பலில் இருந்த ஒரு முதியவர் மட்டும் அந்த ஊரில் பல வருடங்களுக்கு முன் ஒரு துறவி இருந்ததாகவும், அவர் அதே ஓரில் சமாதி அடைந்ததாகவும் சொன்னார். இரண்டு, மூன்று வருடங்கள் அவரது சமாதிக்கு பூஜைகள் தொடர்ந்து நடந்ததாகவும், பிறகு அது நின்று போனதாகவும் சொன்னார்.
ஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் 58-வது பீடாதிபதி அங்கேதான் சமாதி அடைந்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட மகான் அந்த கிராமம் முழுக்கத் தேடி அவரது சமாதியை கண்டுபிடித்தார். பிறகு தன்னுடன் வந்த அடியார்களில் ஒருவரிடம் அந்த இடத்தை தோண்ட சொன்னார்.'அகலமாக வேண்டாம், ஆழமாக தோண்டுங்கள்' என்று கட்டளையிட்டார். மண்வெட்டிஎடுத்து மகான் காட்டிய இடத்தை தோண்டினார் ஒருவர். அப்போது அருகில் இருந்த குமாரமங்கலம் சாம்பமூர்த்தி சாஸ்திரி என்பவர் மெய்மறந்து 'தோண்டாதே தோண்டாதே' என்று கூச்சலிட்டு அங்கேயே மயங்கி விழந்தார். தோண்டிய ஆசாமி திகைத்துபோய் உடனே தோண்டுவதை நிறுத்தினார். வெகு நேரத்துக்கு பிறகுதான் அவரது மயக்கம் தெளிந்தது. மகான் சாம்பமூர்த்தி சாஸ்திரியிடம் மெதுவாக விசாரித்தார்.

'உடலில் காவி .. கையில் தண்டம். கழுத்தில் ருத்திராட்ச மாலை .. நெற்றி நிறைய விபூதி .. இத்துடன் ஆகாயத்தை தொடுமளவு ஒரு துறவியின் உருவம் என் கண் முன் தோன்றியது. அவருக்கு முன்னால், ஆயிரக்கணக்கான அந்தணர்கள் வேதபாராயணம் செய்வதைக் கண்டேன். ஒரு கட்டத்தில் அவர் மெல்லிய குரலில் 'தோண்டாதே .. தோண்டாதே' என்று கூறியது என் செவிகளில் விழுந்தது. அதையே நானும் சொல்லியிருப்பேன் போலிருக்கிறது. பின்னர் அந்த நெடிய உருவம் சிறிதாகி மறைந்து போனது! 'சதாசிவம். சதாசிவம்' என்று யாரோ ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கேட்டேன்!' என்றார்.

அதே இடத்தில்தான் ஸ்ரீஆத்ம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருப்பதை உறுதிசெய்துகொண்ட மகாபெரியவா, 1927-ஆம் வருடம் ஜனவரி மாதம் 17-ஆம் தேதி அதிஷ்டானத்துக்கு பிருந்தாவனம் கட்டி, சிவலிங்க பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கே வருடா வருடம் ஆராதனை நடக்கிறது.

சேலத்தில் இருக்கிறது மகா பெரியவா கிரஹம் (இல்லம்). இந்த கிரஹத்தின் மாடியில் வசித்து வருகிறார் ராஜகோபால் என்பவர். கும்பகோணம் அருகில் இருக்கும் கோவிந்தபுரத்தையும் மகாபெரியவாளையும் சம்பந்தப்படுத்தி சுவாரஸ்யமான அனுபவம் ஒன்றைச் சொன்னார்.

ஒரு முறை தம்பதிசமேதராக காஞ்சி மகானின் தரிசனத்துக்கு சென்றிருந்தார் ராஜகோபால். அப்போது யதேச்சையாக பெரியவா ராஜகோபாலிடம் கேட்டாராம்: "ஏண்டா, நீ கோவிந்தபுரம் (காஞ்சி மடத்தின் 59-வது பீடாதிபதி ஸ்ரீபோதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இங்குதான் ஸித்தியடைந்தார்!) போயிருக்கியோ?"

'இன்னும் போகலை' என்றார் ராஜகோபால்.

புன்சிரிப்பு தவழ மகான் சொன்னார் : "ஒரு தடவை அந்த ஊருக்குப் போயிட்டு வா… புரியும்!' 'அந்த ஊர் எங்கே இருக்கிறது?' என்றெல்லாம் கேட்காமல் நிறுத்திக் கொண்டார் அந்த பக்தர்.

இது நடந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் சேலத்தில் 'பெரியவா கிரஹம்' ஸ்தாபிதமானது. காஞ்சி சங்கரமடத்தில் வருடாவருடம் மகா பெரியவா ஜெயந்தி (வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம்) விமரிசையாக நடக்கும். அதேபோல் சேலம் பெரியவா கிரஹத்திலும் அதே தினம் பெரியவா ஜெயந்தி விழா நடக்கும். அன்றைய தினத்தில் சுமங்கலிகளுக்குப் புடவை தானம் அளிப்பது வழக்கம். இந்த புடவைகள் தஞ்சை மாவட்டம் குத்தாலத்தில் குறிப்பிட்ட ஒரு குடும்பத்தாரால் தயார் செய்யப்படுபவை. அந்த வருடம் , ராஜகோபாலின் மனைவி வழி உறவினரான ஒரு டாக்டர் (அமெரிக்காவில் இருக்கிறார்). சேலைகளை வாங்கிக் கொடுக்கும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருந்தார். எனவே ராஜகோபால் தன் மனைவியுடன் குத்தாலம் சென்று புடவைகளை ஆர்டர் கொடுத்த பின், மெயின் ரோடு வந்தார். சேலம் திரும்புவதற்கு எந்த பக்கம் பயணம் செய்வது என்கிற குழப்பத்துடன் கணவனும் மனைவியும் பிற்பகல் நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் விழித்தனர். வயிற்றுப் பசி வேறு ஒரு பக்கம் அவர்களை அழுத்தியது. அப்போது ஒரு கார் வேகமாக வந்து அவர்கள் முன் பிரேக் போட்டு நின்றது.
டிரைவர் அவர்களிடம் கேட்கிறார்: "ஏன் சார் நீங்க கோவிந்தபுரம் போகணுமா?"

'சட்' டென்று உறைத்தது ராஜகோபாலுக்கு. என்றோ ஒரு நாள் மகாபெரியவா இவரிடம் கேட்ட கேள்வியல்லவா இது? டிரைவரை மேலும் கீழும் பார்த்துவிட்டு "ஆமாம்" என்றார். ஒருவித பிரமிப்புடன்.

"வண்டியில் ஏறுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்" என்றார் டிரைவர்.

இருவரும் வண்டியில் ஏறினர். சிறிது நேரப் பயணத்துக்குப் பிறகு கார் கோவிந்தபுரம் சாலையில் போய் நின்றது. "இங்கேருந்து கொஞ்ச தூரம் நடந்தா கோயில் வரும்! தரிசனம் பண்ணிட்டுக் கிளம்புங்க" என்று சொன்ன அந்த டிரைவர் ராஜகோபால் கொடுத்த வாடகைப் பணத்தையும் வாங்கிக் கொள்ளாமல் புறப்பட்டுப் போய்விட்டார்.

கோவிந்தபுரத்தை அடைந்த தம்பதி கோயிலுக்குள் நுழையும் முன்னரே ஓர் அந்தணர் அவர்களைப் பார்த்து, "வாருங்கள் … வாருங்கள். உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறோம். முதலில் சாப்பாடு. பிறகுதான் எல்லாம்!" என்று இருவரையும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அவர் அழைத்துச் சென்ற இடம் போஜன சாலை! இரண்டே இலைகளைத் தவிர எஞ்சியிருந்த இலைகள் முன்னால் அடியவர்கள் சாப்பிடுவதற்காக அமர்ந்திருந்தனர்.

சாப்பிட்டு முடிந்த பின் கோயிலையும் அதிஷ்டானத்தையும் பார்த்துவிட்டுத்தான் தம்பதி சேலம் திரும்பினர்.

கார் சவாரி, சாப்பாடு, உபசரிப்பு எல்லாமே பெரியவா ஏற்பாடுதானோ? தன் பக்தர்களுக்கு எந்த குறையையும் அந்த மகான் வைத்ததே இல்லை!!

கலியுக தெய்வம், கற்பகவிருட்சம், காஞ்சி மாமுனி மகாபெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் தெய்வாம்சங்களை எத்தனையோ விதங்களில் ஆராதித்து எவ்வளவோ படைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. அவற்றையெல்லாம் பக்த மகாஜனங்கள் அள்ளி அள்ளிப் பருகி பரவசம் அடைந்து கொண்டே இருக்கிறார்கள்.மகா பெரியவரின் கண்வீச்சு ஒரே ஒரு தடவை தங்கள் மீது படிந்தாலே மோட்சம் கிட்டிவிட்டதாக ஆத்ம திருப்தி அடைந்தவர்கள் அநேகம் அநேகம். அப்படியிருக்க, அந்த பகவானே நேரடியாக வேடிக்கையும் வியப்புமாக, அன்பும் ஆசியுமாக அந்த பக்தர்களிடம் திருவிளையாடல் நடத்தினால் அதற்கு எவ்வளவு கொடுத்து வைத்திருக்கவேண்டும்! அந்த அற்புத திருவிளையாடல்களைப் படித்து ரசிப்பதில்தான் எத்தனை சுகமிருக்கிறது!
தமிழ் எழுத்தாளர்களில் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவரும், அபாரமான நல் அனுபவங்களைப் பெற்றவருமான ரா.வேங்கடசாமி, காஞ்சி மகா ஸ்வாமிகளுடன் தங்களுக்கு நேர்ந்த சிலிர்ப்பான அனுபவங்களை பக்தர்களிடம் கேட்டுத் தொகுத்து அதை 'காஞ்சி மகானின் கருணை நிழலில்…' என்ற தலைப்பில் சக்தி விகடனில் தொடராக எழுதியபோது, அது பெரும் வரவேற்பைப் பெற்றது.

Monday, 7 October 2013

வெண்ணாற்றங்கரையில் மூன்று கோவில்கள்

தஞ்சாவூர் நகரைத் தாண்டியதும் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். இந்த வெண்ணாற்றங்கரையில் இப்போது மூன்று கோவில்கள் உள்ளன. இந்த மூன்று தலங்களிலும் மூன்று பெருமான்கள் எழுந்தருளியுள்ளனர்.மூன்று தலங்கள் இருந்தாலும் ஒரு திவ்யதேசமாகவே மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. இம்மூன்று கோவில்களும் ஒரு பர்லாங் சுற்றளவிற்குள்ளேயே அமைந்துள்ளது.

1. தஞ்சை மாமணிக் கோவில்

மூலவர் : நீலமேகப் பெருமாள்
தாயார் : செங்கமலவல்லி
தீர்த்தம் : கன்னிகா புஷ்கரணி
விமானம் : சௌந்தர்ய விமானம்


2. மணிக்குன்றம்

மூலவர் : மணிக்குன்றப் பெருமாள்
தாயார் : அம்புச வல்லி
தீர்த்தம் : ஸ்ரீ ராம தீர்த்தம்
விமானம் : மணிக்கூட விமானம்

3. தஞ்சையாளி நகர்


மூலவர் : நரசிம்மர்
தாயார் : தஞ்சை நாயகி
தீர்த்தம் : சூர்ய புஷ்கரணி
விமானம் : வேதசுந்தர விமானம்

அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி


அருள்மிகு அழகிய மணவாளன் திருக்கோவில், திருக்கோழி பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).
திருக்கோழி என்னும் உறையூர் திருச்சி நகருக்குள்ளேயே உள்ளது. திருச்சி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் உள்ளது.

இறைவன்: அழகிய மணவாளன்
இறைவி: கமலவல்லி நாச்சியார்
தீர்த்தம் : கல்யாண தீர்த்தம்
தற்போதைய பெயர் : உறையூர்(திருக்கோழி)
பதிகம் : திருமங்கையாழ்வார்

சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானையொன்று ஊருக்குள் வந்தபோது ஒருகோழி அதனை எதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும் , அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாக்கித் திருக்கோழியாயிற்று. இங்கு கமலவல்லி நாச்சியார் வடதிசை நோக்கி திருமணத்திற்கு தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காணப்படுகிறார்.

க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள்

அருள்மிகு ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயம்

அருள்மிகு ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில்
திருலோக்கி,
திருவிடைமருதூர் வட்டம், தஞ்சை மாவட்டம்.
பட்டாச்சார்யார்
 : வரதராஜன்  9487131630தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், திருலோக்கி எனும் தலம் காவிரி மற்றும் பழவாறு ஆகிய நதிகளின் வடபுறம் அமைந்துள்ள கிராமம். இக்கிராமத்தின் வடபுறம் ராமர் ஓடை எனும் சிற்றாறு ஓடுகிறது. முதலாம் இராஜராஜனின் பட்டத்து அரசிகளில் ஒருவரான திரைலோக்கிய மாதேவியாரின் திருப்பெயரில் திரைலோக்கிய மாதேவியார் சதுர்வேதி மங்கலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டு நாளடைவில் திருலோக்கி என மருவி அழைக்கப்படலாயிற்று.

மூன்று லோகங்களிலும் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களும் சித்புருஷர்களும், மஹரிஷிகளும், வாசம் செய்யும் புனித தலமாக இத்தலம் விளங்குகின்றது.

ஆலயங்களின் சிறப்பு
இத்தலத்தில் அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஆலயம், அருள்மிகு கைலாசநாதர் ஆலயம், அருள்மிகு சுந்தரேஸ்வரர் ஆலயம், அருள்மிகு மாரியம்மன் ஆலயம், அருள்மிகு காளியம்மன் ஆலயம், அருள்மிகு அய்யனார் ஆலயம் மற்றும் விநாயகர் ஆலயம் இத்தலத்தின் நாற்புறமும் அமையப்பெற்றுள்ளன.

திருக்கோவிலின் அமைப்பு
அந்நாளில் தேரோடிய வீதிகள் நான்கும் தழுவி நிற்க நடுநாயகமாக சிவன் கோவில்
உள்ளது. இத்திருக்கோயிலின் தென்கிழக்கே அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோயிலின் வாயில் மொட்டை கோபுர
மாக அமைக்கப்பட்டு தற்போது ராஜகோபுரமாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் பல சிறப்புகள் பெற்ற ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா அழகுடையது.ராஜகோபுர வாசலில் ஆஞ்சநேயரும் வாயிலை அடுத்து மண்டபத்தில் கருடாழ்வார் சன்னதியும் உள்ளது. மகா மண்டபதில் வலதுபுறம் தென்முக விஷ்ணு துர்க்கை வீற்றிருக்கிறார். அடுத்து விஷ்வக்சேனர்,யோகநரசிம்மர் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். தென்புறம் பன்னிரு ஆழ்வார்கள் காட்சி தருகின்றனர் வடபுறத்தில் ஸ்ரீ வரதராஜபெருமாள் சன்னதி தென்முகம் நோக்கி உள்ளது. அர்த்தமண்டபத்தை கடந்து கர்பகிரகத்தில் ஸ்ரீக்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் ஐந்து தலை ஆதிசேஷன் மீது சயனிதிருக்கின்றார்.திருக்கோயிலின் தெற்கு பிரகாரத்தின் மேற்கு பகுதியில் ஸ்ரீ க்ஷீரநாயகி தாயார் சன்னதி உள்ளது.


மூர்த்தி 

அருள்மிகு க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் தென்புறம் திருமுடியையும் வடபுறம் திருவடிகளையும் கொண்டு ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையின் மீது கிழக்கு நோக்கிய திருமுகமும் சதுர்புஜங்களும் சங்கு சக்கரதரியாக திருப்பாற்கடலில் சயனித்தவராக காட்சி தருகிறார்.

திருமுகமண்டலத்தின் அருகே ஸ்ரீ தேவியும் திருவடியின் அருகில் பூதேவியும் வீற்றிருக்க நாபிக்கமலத்திலிருந்து நான்முகன் எழுந்தருளி உள்ளார். இவையனைத்தும் சுதை வேலைப்பாட்டினால் ஆனவை.

சுதையானது பசுவினுடைய காலடி மண், புனுகு, ஜவ்வாது, சாம்பிராணி போன்ற பொருள்களுடன் கோடிக்கணக்கான மூலிகைகளின் சாராம்சமும் சேர்த்து செய்யப்பட்டது. இதற்கு பன்மடங்கு சக்தியுண்டு.

அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் திருமாலுக்கு திருமஞ்சனத்திற்க்கு பதிலாக சாம்பிராணி தைலக்காப்பு விஷ்ணு பதி புண்ணிய காலங்களில் நடைபெறுகிறது
அப்போது பெருமாள் மலர் மாலைகளாலும் துளசி மாலைகளாலும் அலங்கரிக்கப்
படுகிறார்.

மேலும் இத்திருக்கோவிலின் தலவிருட்சம் வில்வ மரமாக இருப்பதால் வில்வ
இலைகளால் அர்ச்சனை செய்வதும் பாற்கடலில் வீற்றிருப்பதால் பால் சம்பந்தப்பட்ட நைவேத்தியங்கள் செய்வதும் சிறப்புடையதாகும்.


தீர்த்தம்
இத்திருகோவிலின் கீழ்ப்புறம் ஆஞ்சனேயர் சன்னதிக்கு பின்னால் அழகிய லெக்ஷ்மி தீர்த்தம் எனும் புஷ்கரணி அமைந்துள்ளது. இது க்ஷீர தீர்த்தம், பாற்கடல் தீர்த்தம் என
வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.இந்த தீர்த்தத்தில் நீராடி சுகேது என்பவர் தனக்கிருந்த நீண்ட நாள் தலைவலியை போக்கிக் கொண்டார். இப் புஷ்கரணியில் திருமகளே நீராடி வில்வ மரத்தினடியில் தவமிருந்து திருமாலின் திருமார்பில் நீங்கா இடம் பெற்றதாகப் புராணம் கூறுகிறது.

ஸ்தலவிருட்சம் 

மூன்று இலைகளையுடைய வில்வ தளங்கள் உலகிலேயே முதன்முதலில் தோன்றிய இடம் திருலோக்கியே என்பது புராண வரலாறு கூறும் உண்மையாகும்.
திருமகள் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம் இயற்றிய காலத்தில் இட கலை,பிங்கலை,சுழிமுனை எனும் மூன்று ஸ்வாச நாளங்கள் மூன்று வில்வ இலைகளாக அமைந்து தெய்வீக சக்தியால் வில்வ தளங்களாக மாறி பூமியில் திரிதள வில்வ மரங்களாக தோன்றின என்பது புராண வரலாறு.

க்ஷீர நாயகி தாயார் சன்னதி :
ஸ்ரீ மஹாலக்ஷ்மியே இத் திருக்கோயிலின் தென் மேற்கில் தனி சன்னதி கொண்டு க்ஷீர நாயகி தாயாராக அருள் பாலிக்கிறார்.க்ஷீர தீர்த்தத்தின் கரையில் வில்வ மரத்தினடியில் அமர்ந்து தவம்புரிந்து ஸ்ரீ நாராயண பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற மஹாலெக்ஷ்மி இவர்தான் இத்தாயாரை வழிபட்டால் கருத்து வேற்றுமையினால் பிரிந்து விட்ட தம்பதிகள் ஒன்று சேர்வதுடன் மகளிர்க்கு மாங்கல்ய பலம் பூரணமாக கிடைக்கும். பால் சம்பந்தப்பட்ட பொருள்களை படைத்து வழிபடுபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் நின்றவண்ணம் காட்சி தருகிறார். அவருக்கு தனி சன்னதி உள்ளது. சதுர்புஜங்களைக் கொண்டு திகழும் வரதராஜரின் வலது கரத்தில் சக்கரமும் இடது கரத்தில் சங்கும் இடம் பெற்றுள்ள நிலையில் ஒரு கரத்தால் அபயம் அளித்து அருள் புரிகின்றார்.வைகுண்ட ஏகாதசி மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் விசேட திருமஞ்சனமும், ஆராதனைகளும் நடைபெறுகின்றது.

விஷ்ணு துர்க்கை
வௌவால் நந்தி மண்டபத்தின் வடபுறத்தில் தெற்கு நோக்கிய விஷ்ணு துர்க்கை சன்னதி உள்ளது. இத்தலத்தில் துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு அம்சமாகும். பஞ்சபாண்டவர்கள் மகாபாரதப் போரில் போர் செய்யப் புறப்பட்ட போது தென்முக துர்க்கையை வழிபட்டதால்தான் வெற்றி கிட்டியது என்பது புராணம். தற்போது இங்குள்ள தென்முக விஷ்ணு துர்க்கையை வழிபட்டு செல்வோர்க்கு எல்லாம் வெற்றியே கிடைக்கும்.

கருடாழ்வார் சன்னதி

ஸ்ரீ க்ஷீராப்தி சயன நாராயணப் பெருமாள் சன்னதிக்கெதிரே கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். இங்குள்ள கருடாழ்வாருக்கு பருப்பு கொழுக்கட்டை நிவெதனம் செய்து வழிப்பட்டால் விஷக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷத்தன்மை நீங்கி சுகம் பெறுவர்.

புராண வரலாறு

த்ரயம்பகேஷ்வரர் என்னும் திரைலோக்கிய சித்தர் பூலோகம், புவர்லோகம், சுவலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் சஞ்சாரம் செய்கின்ற ஆற்றல் படைத்தவர். அவர் கல்வி , செல்வம் , வீரம் , புகழ் ,ஆரோக்கியம் , பணம் முதலான 16 செல்வங்களும் ஒருங்கே பெற்ற தலம் எங்கே உள்ளதெனவும் முக்தி , மோட்சம் , தரக்கூடிய தலம் எங்கே உள்ளதெனவும் நிலம், நீர், நெருப்பு ,காற்று ,ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் ஆற்றல் எத்தகையன ? என்பதையும் கண்டறிய வேண்டி எங்கெல்லாமோ சென்று அலைந்து இறுதியில் திருலோக்கி வந்தடைந்தார். இங்கு ஸ்ரீ புரஹடவாக்கினி என்னும் யோக முறையை கைக் கொண்டு திரிந்து அலைந்த நிலைமையை மாற்றி அமர்ந்து யோகம் செய்யத் தொடங்கியதே இத்தலத்தில் தான். ஸ்ரீ லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்தது இத்தலம். என்றும் திருமாலுடன் திருமகள் உறைகின்ற தலமென்றும் உணர்ந்த நிலையில் சித்தருடைய பூத உடல் மறைந்து அவர் ஜோதி மயமானதாகப் புராணம் கூறுகின்றது.

திருமகள் எக்கணமும் திருமாலை விட்டுப் பிரியாத வரம் பெறல் வேண்டி ஸ்ரீ மார்கண்டேய மகரிஷியிடமிருந்துதிரைலோக்கிய தலம் பற்றிய மஹிமையை உணர்ந்தும் திருமால் தான் திருபாற்கடலில் வீற்றிருப்பது போல எந்தத் திருத்தலத்தில் க்ஷீராப்தி ஸயன நாராயண பெருமாளாகத் தோற்றமளிக்கின்றேனோ அவ்விடத்தில் என் நெஞ்சில் நீங்காத இடம் பெறுவாய் எனப் பணித்ததன் வாயிலாகவும், லக்ஷ்மி தீர்த்தக் கரையில் வில்வ மரத்தினடியில் திருமகள் தவம் புரியத் தொடங்கினாள். என்றும், மேற்கண்ட தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற ரிஷபாரூடர் ஆன அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேசப் பெருமான் திருவருள் பெற்று ஸ்ரீலக்ஷ்மி தேவி க்ஷீராப்தி ஸயன நாராயணப் பெருமாளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றார் என்றும் தல வரலாறு கூறுகிறது.

பூஜா பலன்கள்

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் திருலோக்கியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ க்ஷீராப்தி ஸயண நாராயணப் பெருமாளை தரிசிப்போருக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பித்ருக்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள் லக்ஷ்மி தீர்த்தக் கரையில் தர்ப்பணம் செய்தால் சாப விமோசனம் பெறுவர். ஸந்ததி விருத்தியாகும்.

திருமகள், திருமாலின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருப்பதால் சொத்து, சுகம் இழந்தோர் மீளப் பெறுவர். உறக்கமின்மையும் , தீய கனவுகளும் அடி பிரதட்சணம் செய்வதன் மூலம் நீங்கும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். பால் தானம் செய்து வழிபடும் தாய்மார்களுக்கு தாய்ப் பால் நிறைய சுரந்து சந்ததிகள் நல் வளர்ச்சி பெறுவர்.
பிரிந்து வாழும் தம்பதியர் தொடர்ந்து வழிபாடு நடத்தினால் மனம் மாறி இணைந்து வாழ்ந்து மனச் சாந்தி பெறுவர். திருமணமான மங்கையருக்கு மாங்கல்ய தோஷம் நீங்கி சுமங்கலித்துவமும் மகப்பேறும் கிட்டும்.

தெற்கு முக விஷ்ணு துர்க்கையை வழிபடுவோருக்கு தொழிலில் முன்னேற்றமும். காரிய சித்தியும் ஏற்படும்.

ஆஞ்சனேயரை தரிசித்தல் :

புதிய துணியில் மட்டை தேங்காயை தட்சணையுடன் கட்டி ஸ்ரீ ஆஞ்சனேயரின் திருவடிகளில் சமர்பித்துவிட்டால் நினைத்த காரியம் கைகூடும். பிரார்த்தணை நிறைவேறிய பின்னர் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு அபிஷேக ஆராதனை செய்து மூட்டையை பிரித்து புத்தாடையை அவருக்கு அணிவித்து சக்கரைப் பொங்கல் ,வடைமாலை போட்டு நிவேதனம் செய்ய வேண்டும்.

ஓம் நமோ நாராயணாய :

விபூதி--உடல் கட்டு மந்திரம்,ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
 இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,

வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி 
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும் 
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும் 
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும் 
செய்ய முடியாது.




ஒற்றைத்தலைவலி நீங்க மந்திரம்


இடது கையில் விபூதியை பரப்பி அதில் ஸ்ரீம் என்று எழுதி
அதன்மேல் ஒரு வெற்றிலையை வைத்து மூடிக்கொண்டு

"ஓம் காளி அம் அம் கிலியும்
கிலியும் பத்திரகாளி சிவ நசி"
 


என்று 108 உரு செபித்து பின்பு மேற்படி விபூதியும் வெற்றிலையும் 
கசக்கி வலிக்கிற இடத்தில் போட வலி உடனே தீரும்.

சித்தர் தரிசன மார்க்கம்


 சித்தர் தரிசன மந்திரம்

ஓம் சிங் ரங் அங் சிங்.............. மசி வசி
இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.

நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.

Friday, 9 August 2013

ரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: thanks:dinamalar 26.6.2012

ரூ.1,500 கோடி: ஆண்டவன் சொத்து ஆக்கிரமிப்பு: ம.சண்முகவேல்


சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஆன்மிக திருப்பணியை தலையாய கடமையாக கொண்டு, கிராமங்கள் தோறும் ஆலயங்களை எழுப்பினர். கோவிலுக்கு ஊழியம் செய்தவர்களுக்கு "ஊழிய தானமாக' நஞ்சை, புஞ்சை நிலங்களையும் வழங்கினர். "கோவிலில் வழிபாடு செய்யாமல் கடவுளை பட்டினி போடக்கூடாது; கடவுளுக்கு சேவகம் செய்பவர்களும் பசி, பட்டினியால் வாடக்கூடாது' என்பதற்காக மன்னர்கள் கோவிலுக்காக நிலங்களை ஒதுக்கினர்.

சைவ கோவில்களில் மகாசிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், பிரதோஷம், பவுர்ணமி, தைப்பூசம், சஷ்டி வழிபாடு, பங்குனி உத்திரம், வைணவ கோவில்களில் புரட்டாசி வழிபாடு, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி, திருவோணம், மார்கழி வழிபாடு, சித்திரை திருவிழா... என ஒவ்வொரு விசேஷத்திற்கு தனித்தனியாக நிலங்களை பிரித்து கொடுத்தனர். அந்த நிலங்களை பராமரிப்பதில் கிடைக்கும் நிதியை கொண்டு கோவில் விழாக்களை சிறப்பாக நடத்த, நிலதானம் செய்தனர்.அதேபோன்று, கோவில் குருக்கள், பண்டிதர், ஓதுவார், இசைக்கலைஞர்களுக்கு ஊதியத்திற்கு பதிலாக நிலங்கள் ஒதுக்கி கொடுத்தனர். அதில் விவசாயம் செய்து வருவாய் எடுத்துக்கொண்டு கோவிலுக்கு ஊழியம் செய்ய வேண்டும். தவிர, நேர்த்திக்கடனாக கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட நிலங்களும் உள்ளன. கோவில் நிலங்களை அனுபவித்து வந்தவர்கள், அந்த நிலத்தை காலப்போக்கில், தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து கொண்டனர். நில உரிமை பதிவேடுகள், நில உடமை மேம்பாட்டு திட்டம் (யுடிஆர்) மூலம் மாற்றம் செய்யப்பட்ட போதும், கம்ப்யூட்டர் சிட்டாவாக பதிவேடுகளில் மாற்றம் செய்தபோதும், கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு மாறி விட்டன. பெயர் மாற்றம் செய்ததன் பின்னணியில் அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எழுதப்படிக்க தெரியாதவர்களின் பெயரில் மாற்றம் செய்த கோவில் சொத்துக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மாற்றி எழுதி விற்பனை செய்தனர்.மேலும், கோவில் நிலத்தை அனுபவித்து வந்தவர்களின் வம்சாவழிகள், கோவில் திருப்பணிகளை மறந்து அந்த நிலத்தை அவர்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். கடந்த 1963ல் கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயத்து வாரியாக மாற்றுதல்) சட்டத்தின் கீழ் கோவில் சேவைக்காக மாற்றப்பட்டது. அதன்பின், கடந்த 1996ல் கோவில் நிலங்கள் கோவில் பெயருக்கு மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

பட்டா மூலம் சிக்கியது:இந்த வகையில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட கோவில் நிலம், கோவை மாவட்டத்தில் 4,518 ஏக்கர், இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 10, 094 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 4,827 ஏக்கரும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள 4,518 ஏக்கரில், 2,733 ஏக்கர் நிலம் கோவில்களின் பெயரில் உள்ளது. மீதமுள்ள 1,785 ஏக்கர் கோவில் நிலம், தனியார் பெயர்களில் உள்ளது.அதில், 863 ஏக்கர் கோவில் நிலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக 55 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, 42 வழக்குகள் தீர்வு செய்யப்பட்டது. அதன் மூலம் 596 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது.மேலும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட 41 வழக்குகளில் 706.40 ஏக்கர் தனியார் வசமுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணை முடிந்த 12 வழக்குகளில் 206 ஏக்கர் நிலம் கோவில் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் (கோவில் நிலம்) பிரிவில், மொத்தம் 900.4 ஏக்கர் நிலம் தனியார் வசம் ஆக்கிரமிப்பில் உள்ளதை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அறநிலையத்துறை வசமுள்ள நிலம்:வருமானத்தின் அடிப்படையில் பெரிய, சிறிய கோவில்கள் வகைப்படுத்தப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானமுள்ள 515 பெரிய கோவில்களும், 1,800 சிறிய கோவில்களும் உள்ளன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன் கூறியதாவது:கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்கள் உள்ளடங்கிய, இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டலத்தில், நஞ்சை நிலம் 1,130 ஏக்கர், புஞ்சை நிலம் 7,055 ஏக்கர், மானாவாரி நிலம் 184 ஏக்கர் உள்ளது. மனையிடங்கள் 16 லட்சத்து 43 ஆயிரத்து 148 சதுர அடி உள்ளது. கட்டடங்கள் வகையில் எட்டு லட்சத்து எட்டாயிரத்து 186 சதுர அடியில் 1,417 கட்டடங்கள் உள்ளன. இதில், கோவை மாவட்டத்தில் மட்டும், நஞ்சை நிலம் 548.43 ஏக்கர் உள்ளது. அதில், குத்தகைக்கு 353 ஏக்கர் விடப்பட்டுள்ளது. காலி இடமாக 25 ஏக்கரும், வழக்கு விசாரணைக்கு உட்பட்டு 170 ஏக்கரும் உள்ளது.கோவை மாவட்டத்தில் புஞ்சை நிலம், 2,062.62 ஏக்கர் உள்ளது. அதில், ஆயிரத்து 44 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. காலி இடமாக 245 ஏக்கரும், வழக்கு விசாரணை நிலுவையில் 373 ஏக்கரும் உள்ளது. மீதமுள்ள 387.43 ஏக்கர் நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. மானாவாரி நிலம் 1.36 ஏக்கர் அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மனையிடங்கள் இரண்டு லட்சத்து 53 ஆயிரத்து 316 சதுர அடி உள்ளது. அதில், இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 4,610 சதுர அடி நிலமும், 28,671 சதுர அடி நிலம் காலியிடமாகவும் உள்ளது. மீதமுள்ள இரண்டாயிரம் சதுர அடி நிலத்தின் மீது வழக்கு விசாரணை உள்ளது. கட்டடங்கள் வகையில், கோவை மாவட்டத்தில் மூன்று லட்சத்து இரண்டாயிரத்து 956 சதுர அடியில் 672 கட்டடங்கள் உள்ளன. அதில், 561 கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கோவில் பராமரிப்பில் 33 கட்டடங்கள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் வசம் 6,480 சதுர அடியில் 27 கட்டடங்களும், வழக்கு விசாரணை நிலுவையில் 3,435 சதுர அடியில் 35 கட்டடங்களும் உள்ளன.இவ்வாறு, இணை ஆணையர் தெரிவித்தார்.

மொத்தம் ரூ.1,500 கோடி மதிப்பு:பட்டா பெயர் மாற்றம் செய்த வகையில், கோவை மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் வசம் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை வசமுள்ள நிலத்தில் 930 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,830 ஏக்கர், கோவில் நிலம் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது.கிராம பகுதிகளில் நிலத்தின் மதிப்பு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 15 லட்சமும், மாநகர பகுதியில் ஒரு சென்ட்க்கு 15 லட்சமும், மாநகரை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாயும் மதிப்பு உள்ளதாக அறநிலையத்துறையினர் கணித்துள்ளனர். அந்தவகையில், கோவை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட கோவில் நிலத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாய் என்பது எல்லோரையும் மிரள வைக்கிறது.

ஸ்ரீ ரங்கநாதர் சொத்து...:கோவை, வெள்ளலூர் எல்.ஜி., நகர் பேஸ்-1 பின்பக்கம் திருச்சி ஸ்ரீரங்கம், ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 54 ஏக்கர் நிலம் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்நிலத்தை எட்டு பேர் குத்தகைக்கு எடுத்து, விவசாயம் செய்து வந்தனர். ஸ்ரீரங்கநாத சுவாமி கோவில் தர்ம ஸ்தாபனம் என்ற அறக்கட்டளையின் பெயரில் இந்நிலம் உள்ளது. இதன் முதல் நிர்வாக அறங்காவலராக விஜயராகவ அய்யங்கார், இரண்டாவதாக வெங்கட்ரமண அய்யங்கார், மூன்றாவதாக சீனிவாச அய்யங்கார் ஆகியோர் இருந்தனர். இவர்களுடன் பிற சமூகத்தை சேர்ந்தவர்கள் அறங்காவலர்களாக இருந்தனர். கோவில் பெயரில் இருந்த ஆவணங்களை தனியார் பெயருக்கு மாற்றி, சமீபத்தில் வேறு நபருக்கு விற்பனை செய்துள்ளது இந்து சமய அறநிலையத்துறைக்கு தெரியவந்துள்ளது. ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில் நிலத்தை தற்போது சமப்படுத்தி லே-அவுட்கள் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணியில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் இருப்பதால் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகிறது. கோவில் நிலத்தை கோவிலுக்கு சேர்க்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்கள், இந்த பிரச்னை குறித்து முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

சுப்ரமணியர் சொத்து விற்பனை:பொள்ளாச்சி சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர் நிலம் மாக்கினாம்பட்டி கிராமத்தில் உள்ளது. தற்போது அந்த நிலம் தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறித்து, அறநிலையத்துறை மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) புகார் வந்துள்ளது. அதிகாரிகள் விசாரணையில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு கோவில் மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும். ஆனால், கோவில் நிலத்தின் மூலம் வருமானம் கிடைக்கவில்லை என்று கூறி, அந்த நிலத்தை குறைந்த விலைக்கு விற்று, பணத்தை கோவிலுக்கு செலுத்தியுள்ளனர். அதற்கு வருவாய்த்துறையில் தாசில்தார், துணைக்கலெக்டர் பணியில் இருந்தவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். வருவாய்த்துறை, கோவில் அறங்காவலர் பொறுப்பில் இருந்தவர்கள் சேர்ந்து அந்த நிலத்தை பட்டா மாறுதல் செய்து விற்பனை செய்துள்ளனர். அதற்காக, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அந்த லே-அவுட்டில் இடங்களை இனாமாக ஒதுக்கியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் நிலத்தை விற்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாத போது, நிலத்தை அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து விட வேண்டும். ஆனால், அதிகாரிகள் துணையோடு 19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை 53 சைட்களாக பிரித்து சூறையாடியுள்ளனர். அந்த நிலம் கட்டாயம் கோவிலுக்கு திரும்ப மீட்கப்படும். இவ்வாறு, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இனிமேலாவது செய்வார்களா?வி.ஏ.ஓ.,க்கள் மூலம் கிராமத்தின் பழைய ஆவணங்களை ஆய்வு செய்து கோவில் நிலங்களை முழுமையாக கண்டறிய வேண்டும். கண்டறியப்பட்ட கோவில் நிலங்களுக்கு வேலி அமைத்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். அந்த இடங்களில் வருவாயை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.கோவில் நிலம் முழுவதும் மீட்கப்பட்டு, வாடகை வசூலிக்கும் போது, ஒவ்வொரு கோவிலின் வருவாயும் உயரும். கோவில் வருவாயை கொண்டு மக்களுக்கு தேவையான நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிலம், வருவாய் இல்லாத கோவில்களை, மற்ற கோவில்களின் வருவாயை கொண்டு மேம்படுத்த வேண்டும்.முதல்வர் ஜெயலலிதா, கோவில் நிலம் மீட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். அரசியல் தலையீடுகளை களைந்து கோவில் நிலங்களை காக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையார் சொத்தும்...:திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம், பொள்ளாச்சியில் மாக்கினாம்பட்டி கிராமத்திலும், பொள்ளாச்சி நகரத்திலும் உள்ளது. பொள்ளாச்சி நகரில் பல்லடம் ரோடு பெரியார் காலனி வார்டு எண் 12ல் "பழைய சாராய கோர்ட்' அருகில் உள்ளது.பழங்கால கோவில், குடியிருப்புகள், காலி இடங்கள் என மொத்தம் 12 ஏக்கர் பரப்பில் உள்ளது. அந்த இடம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனி நபரால் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அருணாச்சலேஸ்வரர் கோவில் தர்ம காரியங்களுக்கு பயன்படுத்த ஒப்படைக்கப்பட்ட நிலத்தை தனி நபருக்கு பட்டா மாற்றம் செய்து அனுபவித்து வருகின்றனர். கோவில் நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

"டயல்' செய்யுங்க...:கோவில் நிலங்களை மீட்பதற்காக தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த கடந்த 2004ல் அரசு உத்தரவிட்டது. கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் இந்த பணியிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் ஐந்து மாவட்டத்தில் கோவில் நிலம் மீட்புக்காக மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது. கோவையிலுள்ள கோவில் நிலம் டி.ஆர்.ஓ., கட்டுப்பாட்டில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டு மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் கோவில் நிலங்கள் பற்றி புகார்கள் ஏதாவது இருந்தால் 0422 - 224 8999 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

"விசுவாச' அதிகாரிகள்:அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், தனித்து செயல்படும் அதிகாரம் மாவட்ட வருவாய் அலுவலருக்கு (கோவில் நிலம்) வழங்கப்பட்டுள்ளது. நில உடமை மேம்பாட்டு திட்டத்தின் மூலம், நிலத்தை பராமரித்தவர்கள் பெயருக்கு நிலப்பட்டா வழங்கிய போது ஏற்பட்ட குளறுபடிகளால் கோவில் நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டது.வருவாய்த்துறையினரின் குளறுபடி, கோவில் நிலங்கள் கைநழுவி செல்ல முக்கிய காரணமானது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவில் நிலங்களை கண்டுபிடித்து, அவற்றை மீட்டு அறநிலையத்துறை வசம் ஒப்படைத்து வருகிறார்.அந்த நிலங்களுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வேலி அமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலம் என அறிவிப்பு பலகையை உடனடியாக வைப்பதில்லை. மேலும், கோவில் நிலங்களுக்கு அதிகபட்சமாக குத்தகை தொகை நிர்ணயம் செய்வதில்லை. இதனால் வருவாய் இழப்பும், நிலம் ஆக்கிரமிப்பும் ஏற்படுகிறது.அறநிலையத்துறை அதிகாரிகள் அரசியல் கட்சியினர், ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து "சன்மானத்திற்கு' விசுவாசமாக செயல்படுகின்றனர். இதனால், கோவில் நிலங்கள் தனியார் வசம் தொடர்கிறது.

ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்கள்:* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், செஞ்சேரிமலை - 228.38 ஏக்கர்
* திருவேங்கட நாதர் பெருமாள், வைத்தியநாத சுவாமி கோவில், சூலூர்- 258 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மாக்கினாம்பட்டி - 6.33 ஏக்கர்
* பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் இடம், மார்ச்சநாயக்கன்பாளையம் - 8.32 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், குனியமுத்தூர் - 7 ஏக்கர்
* உக்கடம் நரசிம்ம பெருமாள் கோவில், கழிவு நீர் குட்டை அருகில் - 8 ஏக்கர்
* பெரியகடைவீதி லட்சுமி நாராயண வேணுகோபால் சுவாமி கோவில், செல்வசிந்தாமணி குளம் எதிரில் - 12 ஏக்கர்
* பிரசண்ட விநாயகர் கோவில், மார்ச்சநாயக்கன்பாளையம் - 28.25 ஏக்கர்
* மாட்டேகவுண்டன் கோவில், காளியாபுரம் - 1.21 ஏக்கர்இதுதவிர நீதிமன்ற வழக்கு விசாரணையில் கோவில் நிலங்கள் ஏராளமாக உள்ளன.

ஓராண்டில் மீட்கப்பட்ட கோவில் நிலங்கள்:
(10 ஏக்கருக்கும் அதிகமானவை)
* பொங்காளியம்மன் கோவில், தேவணாம்பாளையம் - 20.5 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், தேவம்பாடி - 16.36 ஏக்கர்
* அழகு திருமலைராயப்பெருமாள், நல்லூர்- 19.43 ஏக்கர்
* பகவதியம்மன் கோவில், கிணத்துக்கடவு - 15.62 ஏக்கர்
* விநாயகர் கோவில், மெட்டுவாவி - 14.29 ஏக்கர்
* சோளியம்மமன் (எ) பனப்பட்டி அம்மன், வடசித்தூர் - 36.70 ஏக்கர்
* வெங்கடேச பெருமாள் கோவில், கரியாஞ்செட்டிபாளையம்- 20.49 ஏக்கர்
* மாதங்கியம்மன் கோவில், சேர்வக்காரன்பாளையம் - 36.40 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், ஜல்லிபட்டி - 24.70 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், தொண்டாமுத்தூர் - 15.3 ஏக்கர்
* கரியகாளியம்மன் கோவில், தொண்டாமுத்தூர்- 39.42 ஏக்கர்
* மாரியம்மன் கோவில், தொண்டாமுத்தூர் - 23.58 ஏக்கர்
* அமணீஸ்வரர் கோவில், குரும்பபாளையம் - 13.56 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், ஏரிப்பட்டி
- 26.68 ஏக்கர்
* அங்காளம்மன் கோவில், நாட்டுக்கல்பாளையம்- 14.40 ஏக்கர்
* புத்தாரம்மன் கோவில், செஞ்சேரிமலை, சூலூர்- 25.59 ஏக்கர்
* செஞ்சேரிமலையம்மன் கோவில், ஜல்லிபட்டி - 12.8 ஏக்கர்
* காணியப்பசுவாமி கோவில், அரசூர் - 36.9 ஏக்கர்
* வரதராஜ பெருமாள், அனுமந்தராயர் கோவில், கணியூர் - 15.61 ஏக்கர்

· ம.சண்முகவேல் ·படங்கள்: ஆர்.பிரபு, அ.லட்சுமிநாராயணன் thanks:dinamalar 26.6.2012