Friday, 25 January 2013

சமணமலை ஐயனார் நாகமலை கருப்பஸ்வாமி


சமணமலை ஐயனார் நாகமலை கருப்பஸ்வாமி
ஆங்கிலத்தில்: பீ. ஆர். ராமச்சந்திரன்

தமிழ் மொழிபெயர்பு : சாந்திப்பிரியா



தமிழ்நாட்டில் மதுரைப் பகுதியில் ஒரு காலத்தில் ஜைன மதம் தலை தூக்கி நின்றது. சமண மலைப் பகுதியில் அவர்களது கல்வெட்டுக்களும் சிலைகளும் நிறைய இருந்தன. அந்த மலை அடிவாரத்தில் உள்ளது நாகமலை. அங்கு புகழ் பெற்ற ஐயானார் ஆலயம் உள்ளது. மலை மீது கருப்பண்ணஸ்வாமிக்கும் ஆலயம் இருந்தது. மதுரை ஆங்கிலேயே ஆட்சியில் இருந்தபோது அவர்களில் ஒரு படை தளபதி அடிக்கடி மதுரை மீனாஷி அம்மன் ஆலயத்துக்குச் சென்று அவளை அவமதிப்பது உண்டு. கருப்பண்ணஸ்வாமியினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த படை தளபதியின் குதிரையை உதைத்து கீழே விழச் செய்தார். அது அனுதினமும் தொடர்ந்தது. ஆகவே படை தளபதி ஒரு குறி சொல்பவரிடம் குறி கேட்டபோது அவரும் மலை மீது உள்ள கருப்பண்ணஸ்வாமி அதை செய்து வருவதினால் அவரை கீழே இறக்கி வந்து நாகமலை ஐயனார் ஆலயத்தின் பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்து விடுமாறு கூறினார். அதை செய்தப் பின் அந்த பிரச்சனை நின்றது. அந்த படை தளபதியும் அங்குள்ள மக்களுக்கு நிறைய நிலம் தந்தார்.
அந்த ஊரின் அருகில் கீழ் குயில் குடி என்ற மற்றொரு கிராமம் இருந்தது. அந்த இரண்டு இடங்களும் எப்போதும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு இருந்தது. ஆகவே அந்த இரண்டு ஊரிலும் இருந்த மக்கள் வெளியூருக்குச் சென்று வேலை பார்த்தனர். அவர்களில் இருவர் கருமாத்தூரில் இருந்த முனுஸ்வாமி ஆலயத்தில் பூசாரிகளாக வேலைக்குச் சேர்ந்தனர். அவர்கள் பஞ்சம் தீர்ந்ததும் தமது ஊருக்குக் கிளம்பியபோது கருமாத்தூர் விரும்பஸ்வாமியும் காசி மாயனும் தமது ஆலயங்களில் இருந்து ஒரு பிடி மண்ணை அவர்களுடன் எடுத்துப் போய் அவர்கள் ஊரில் ஒரு இடத்தில் அந்த மண்ணைப் போட்டு அந்த இடத்தில் கருமாத்தூர் விரும்பஸ்வாமிக்கும் காசி மாயனுக்கும் ஒரு ஆலயம் அமைத்தனர். மேலும் கழுவனாதன், கருப்பாயி அம்மன், இருளப்பன், சங்கிலிக் கருப்பன் போன்றவர்களையும் காவல்காரர்களாக நியமித்து சிலைகளை செய்தனர். கருப்பண்ணஸ்வாமி ஆலயம் ஐயனார் ஆலயத்துக்கு அருகில் வரும்வரை ஐயனார் ஆலயத்துக்கு பிராமணர்கள் வந்து பூஜை செய்தனர். ஆனால் கருப்பண்ணஸ்வாமி அங்கு வந்தப் பின் அவர்கள் வருவதை நிறுத்திவிட வேலர் என்ற சமூகத்தினர் காடுகளில் இருந்து வந்து அந்த ஆலயங்களை நிர்வாகித்தனர். அவர்கள் திரும்பிச் செல்லும்போது கருப்பண்ணஸ்வாமி அவர்களுக்குத் துணையாகச் செல்வாராம். அந்த வேலர்கள் தமது குழந்தைகளுக்கு சமண மலைக் கரடி எனப் பெயர் வைப்பது உண்டாம்.
ஐயனார் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் பாவாடை விழா நடைபெறும். அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் 150 கிலோ அரிசியை உணவாக சமைத்து அதை நைவித்தியம் செய்தப் பின் ஊரில் உள்ள அனைவருக்கும் தருகின்றனர். முத்தாலம்மனின் சிலையை களிமனால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஊராரின் செலவில் மூன்று குதிரைகளையும் செய்து வைகின்றார்கள். அன்று ஆடுகளும் பலியாக தரப்படுகின்றன. ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த காரியத்தையும் செய்வது இல்லை.

1 comment:

  1. காவல் தெய்வங்கள் பற்றிய பகிர்வு அருமையான தகவல்களுடன். நன்றி ஐயா!

    ReplyDelete