Friday, 25 January 2013

கலையாற்குரிச்சி கூடமுடையார்

கலையாற்குரிச்சி கூடமுடையார்
பீ. ஆர். ராமச்சந்தர்

தமிழ் மொழிபெயர்ப்பு:- சாந்திப்பிரியா

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ளது கலையாற்குரிச்சி கிராமம். அங்குதான் அர்ஜுனா மற்றும் சரஸ்வதி நதிகள் கலக்கின்றன. அவை சதுரகிரி மலையில் இருந்து வருகின்றன. அங்கு பலர் மாடுகளை மேய்பவர்கள். ஒரு முறை சிவபெருமான் அவர்களுடன் விளையாட நினைத்தார். ஆகவே அவர் ஒரு கன்று போல உருமாறி அனைத்து மாடுகளின் மடியில் இருந்தும் பாலைக் குடித்து விட்டார். அந்த இடையர்களுக்கு மாடுகளின் பால் வற்றி விட்டத்தின் காரணம் தெரியவில்லை. குழம்பினார்கள் . ஆகவே என்ன நடக்கின்றது என அவர்கள் கண்காணிக்கத் துவங்கினார்கள். அப்போது அந்தக் கன்று அனைத்து மாடுகளின் பாலையும் குடிப்பதைக் கண்டு பிடித்தனர். அதைப் பிடிக்கத் துரத்தினார்கள். சிவபெருமான் ஓடிப் போய் ஒரு சாப்பாட்டு பானையில் ஒளிந்து கொண்டார். வருணனை பெரும் மழையை பொழியச் சொன்னார். அதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் அந்தப் பானை மிதந்து சென்று கயலாற்குரிச்சியில் ஓடிய அர்ஜுனா நதியில் உடைந்து விழ சிவன் அங்கிருந்த மண்ணில் ஒளிந்து கொண்டார். அந்த இடத்தின் அருகில் கோவில்பட்டி உள்ளது. அங்கு யாதவர்கள் அதிகம். மாடு மேய்ப்பது அவர்களின் தொழில். ஒரு முறை ஒரு யாதவன் அந்த வழியாக மட்டை ஓட்டிச் சென்று கொண்டு இருந்தபோது சிவபெருமான் அவன் காலை இடறி விட்டார். அது தினமும் தொடர அந்த இடையன் தனது நண்பரான முத்துக் கருப்பன் செட்டியாரிடம் அது பற்றிக் கூறினார். அவர்கள் இருவரும் அந்த இடத்துக்குச் சென்று அங்கு தோண்டிப் பார்க்க அதில் இருந்து முதலில் பாலும் அதன் பிறகு ரத்தமும் வர பயந்து போனவர்கள் குழியை ஒரு கூடையினால் மூடிவிட்டு வந்து விட்டனர். சில நாட்கள் பொறுத்து அவர்கள் மீண்டும் அந்த இடத்திற்க்குச் சென்று மூடிவிட்டு வந்த இடத்தில் திறந்துப் பார்க்க அங்கு சிவ லிங்கம் ஒன்று இருந்தது. அப்போது செட்டியாருக்கு சாமி வந்து தான்தான் அந்த இடத்தில உள்ள கூடை லிங்கம் எனவும் தனக்கு ஆலயம் அமைத்து வழிபடுமாறும் கூற அவர்கள் கிராமத்திற்கு ஓடிச் சென்று அந்த சேதியை அனைவரிடமும் கூற அவர்கள் அதை நம்ப மறுத்தனர். ஆகவே கோபமடைந்த சிவன் அனைத்து மாடுகளையும் கல்லாக்கி விட்டார். பயந்து போனவர்கள் அந்த லிங்கம் கிடைத்த இடத்திற்க்குச் சென்று தம்மை மன்னித்து விடுமாறு கூறி ஆலயம் அமைக்க, உடனே கல்லான மாடுகள் திரும்ப உயிர் பெற்றன. இன்று அந்த செட்டியாரின் வம்சாவளியினரே அந்த ஆலயத்தின் பூசாரிகளாக உள்ளனர்.
சில காலத்திற்குப் பின்னால் கோவில்பட்டியை சேர்ந்த சிலர் அந்த ஆலயம் கட்டியவர்களுக்கு தொந்தரவு தரத் துவங்கினார்கள். அவர்கள் கிராமத்தில் இருந்தவர்களை துரத்தியடித்தனர். ஆகவே சிவன் அந்த வெள்ளத்தின் மத்தியில் ஒரு பாதையை உருவாக்க அங்கிருந்து சென்றவர்கள் அடுத்த கரையை அடைந்தனர். அந்த புதிய இடத்துக்குச் சென்று கூடமுடையான் சிவனுக்கு ஆலயம் எழுப்பினார்கள். சிவன் கிழக்கு நோக்கிப் பார்த்திருக்க அவர்கள் வடக்கு நோக்கி பார்த்தபடி ஒரு ஐயனாரையும், புஷ்கலா மற்றும் பூர்ணாவை வைத்தனர். அந்த ஐயனாரை கூடமுடைய ஐயனார் என அழைக்கின்றார்கள். ஐயனாரைத் தவிர சின்ன கருப்பு, பெரியகருப்பு, ஒத்தை கருப்பச்சாமி, லாடன் , சந்நியாசி, காளி, வேட்டை அருப்புச்சாமி மற்றும் அக்னி கருப்பச்சாமிகளின் சிலைகளும் அங்கு வைக்கப்பட்டு உள்ளன.

1 comment:

  1. ஒரு முறை சென்று தரிசிக்க வேண்டும். ஆவலைத் தூண்டிய ஒரு பதிவு! பகிர்விற்கு நன்றி ஐயா!
    http://www.krishnaalaya.com

    ReplyDelete